19-ம் நூற்றாண்டின் மிகப்பெரும் சீர்திருத்தவாதியாகவும், பெண் கல்விக்கும், பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளித்த இந்திய சமூகப் புரட்சியின் தந்தை ஜோதிபா புலே பிறந்த நாள் இன்று.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் 1827 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோதிராவ் புலே. இவர் பூ வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். ஆகையால் இவரின் பெயருக்கு பின் ‘புலே’ ( பூக்காரர் ) என்று சேர்க்கப்பட்டு பின்னாளில் அது குடும்ப பெயராகவே மாறிவிட்டது.
இவர் தனது ஒரு வயதில் தாயை இழந்தார். இவர் தன்னுடைய 13 வயதில் சாவித்ரிபாய் புலேவை மணந்து கொண்டார்.
புனேயில் உள்ள ஸ்காட்டிஷ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு, கபீர், துக்காராம், தியானேஷ்வர் உள்ளிட்ட ஞானிகளின் கவிதைகள், மார்ட்டின் லூதர், புத்தர், பசவண்ணாவின் நூல்கள் என பலவிதமான புத்தகங்களையும் படித்தார்.
தாமஸ் பெய்னின் ‘ரைட்ஸ் ஆஃப் மேன்’ போன்ற நூல்கள் இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவர் சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டு மனம் நொந்து, தனிநபர் சுதந்திரம், சமத்துவம் எங்கும் பரவ வேண்டும் என்பதே இவரது லட்சியமாக மாறியது.
அதேபோல் இவர் சிறந்த எழுத்தாளராக இருந்தார். ‘த்ருதிய ரத்னா’, ‘குலாம்கிரி’, ‘இஷாரா’ என இவரது பல நூல்கள் வெளிவந்தன. தனது படைப்புகளில் இலக்கிய நடை அல்லாமல் பேச்சு மொழியை அதிகம் பயன்படுத்தினார்.
இவர் கல்விதான் அனைத்துக்கும் தீர்வு என்பதை உணர்ந்தார். கல்வியைப் பரப்பும் பணியை தன் வீட்டில் இருந்தே தொடங்கினார்.
சாவித்ரிபாயை திருமணம் செய்து கொண்டு மற்ற குழந்தைகளை போல் தந்தை சொல் கேட்டு குடும்பம் நடத்தாமல் ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் சமூகத்தை எதிர்த்து கொண்டு சாவித்ரிபாயிக்கு கல்வி கற்று கொடுத்தார் ஜோதிராவ்.
அதோடு நிற்காமல் அவரை ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கும் அனுப்பி இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் மாற முழு உறுதுணையாக இருந்தார் இவர்.
பெண்கள் பேசுவதே குற்றம் என்று கருதப்பட்ட காலகட்டத்தில் பெண்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்று கொடுக்க துவங்கினர் இருவரும். முதன்முதலில் இந்தியாவில் பெண்களுக்கான பள்ளியை 1848-ம் ஆண்டு புனேவில் துவங்கினர் புலே தம்பதியினர்.
அதில் ஆசிரியராக சாவித்ரிபாயே பணியாற்றினார். இதற்காக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தனர் இந்த தம்பதி. குறிப்பாக ஒரு கட்டத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களின் அழுத்தம் தாங்காமல் ஜோதிராவின் தந்தையே இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றினார்.
1852 ஆம் ஆண்டு மட்டும் இவர்களால் 3 பள்ளிகள் நடத்தப்பட்டு வந்ததது. அதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் கல்வி கற்றனர்.
அதில் கூடுதல் சிறப்பே இந்த மூன்று பள்ளிகளில் மட்டும் 273 பெண் குழந்தைகள் கல்வி கற்றனர் என்பதுதான். மொத்தமாக புலே தம்பதியினர் 18 பள்ளிகளை நடத்தினார்கள் என்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
1860 ஆம் ஆண்டுகளில் அதிகமான கணவனை இழந்த கர்ப்பிணி பெண்கள் குழந்தையை வளர்க்க முடியாததால் கருவில் கொல்வது அல்லது பிறந்தவுடன் கொன்றுவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதை பார்த்து மனம் வருந்திய புலே தம்பதியினர் விதவைகள் தங்கள் சிசுக்களை பாதுகாப்பாக பெற்றெடுக்க ஒரு காப்பகத்தை துவங்கினர். அவர்கள் அதற்காக அளித்த விளம்பரத்தில் உங்கள் குழந்தையை வேண்டுமென்றால் நீங்கள் எடுத்து செல்லலாம், அல்லது காப்பகத்தில் கூட விட்டு செல்லலாம் என்று கூறியிருந்தனர்.
இது மட்டுமின்றி புலே தம்பதியினர் விதவை மருமணத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தது, சதிக்கு எதிராகவும், சாதி மதத்திற்கு எதிராகவும் வலுவான சீர்திருத்த இயக்கங்களையும் முன்னெடுத்தனர்.
பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு விடுதி, கணவனை இழந்த பெண்களுக்கான காப்பகங்கள் என எண்ணற்ற சமூக சேவைகளை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செய்துள்ளனர் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலே தம்பதியினர்.
மேலும் இவர் சத்யசோதக் என்ற அமைப்பை நிறுவி சாதிய ரீதியாக, பாலினரீதியான என எந்த வகையிலும் ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும் போராட அழைப்பு விடுத்தார்.
இவரது வாழ்நாள் சமூக சீர்திருத்த பணிகளை கருத்தில் கொண்டு 1888ம் ஆண்டு மும்பையில் இவருக்கு பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகள் முன்னிலையில் மகாத்மா பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. பின்னர், இவர் 28 நவம்பர் 1890 ஆம் ஆண்டு தன்னுடைய 63-வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.