மதுரை அருகே கார் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் காரில் தனது குடும்பத்துடன், விருதுநகரில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது குடும்பத்துடன் அங்கிருந்து புறப்பட்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை கனகவேல் மகன் மணி என்பவர் ஓட்டி வந்தார்.
விருதுநகர் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள சிவரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக கார் சென்றது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாடி சென்ற பைக் மீது அதிவேகமாக மோதியது. அத்துடன் நிற்காமல், சாலையில் இருந்த தடுப்புக் கம்பியில் மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அப்பகுதியில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த, 5 பேரில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கொய்யாப்பழ வியாபாரி பாண்டி என்பவர் கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்