வியாட்நாம் நீதிமன்றம் பல பில்லியன் டாலர் பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ட்ரோங் மி லானுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
வியட்நாம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பல்வேறு தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
வியட்நாமின் முன்னணி நிறுவனமான ‘வான் தின் பாட்’ நிறுவனத்தின் கீழ், உயர்தர ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. நிதிச் சேவைகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இந்த நிறுவதின் தலைவர் 67 வயதான ட்ரோங் மி லான். கைது செய்யப்பட்டவர்களில், கோடீஸ்வர பெண் ‘வான் தின் பாட்’ நிறுவனத்தின் தலைவர் ட்ரோங் மி லானும் ஒருவர்.
சாய்கோன் கமர்ஷியல் வங்கியின் சுமார் 90 சதவீத பங்குகளை வைத்திருந்த லான், போலி கடன் விண்ணப்பங்களை பயன்படுத்தி அந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் வங்கிக்கு 27 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த தொகை நாட்டின் 2023 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) ஆறு சதவீதத்திற்கு சமமாகும்.
அந்நாட்டையே அதிர வைத்த இந்த மோசடி வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், லான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளனர். வியட்நாமில் இத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனை ஆகும்.
மேலும் லான் உடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்ட 84 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறைத் தண்டனை வரை நீதிமன்றம் விதித்துள்ளது.
லானின் கணவர் ஹாங்காங் முதலீட்டாளர் எரிக் சு நப்-கீ குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். எஸ்சிபி வங்கியில் இருந்து போலியான நிறுவனங்களை அமைக்க உதவியுள்ளார். லானின் மருமகன் ட்ரோங் ஹுயு வானும் இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.