நடைபெறும் 2024 மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் பாமக சார்பில் தேவதாஸ், திமுக சார்பில் மலையரசன், அதிமுக சார்பில் குமரகுரு, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீச பாண்டியன் மற்றும் சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதி. இந்த தொகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன.
ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட சோனாப்பாடி மலையோர கிராமங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் கடந்த பல வருடங்களாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஏற்காட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த சோனாப்பாடி கிராமம் உள்ளது. இங்கு 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து கொடுங்கள் என கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரிடமும் மனு அளித்து விட்டனர். ஆனால் ரோடு மட்டும் வந்தபாடு இல்லை.
இதனால், 2024 மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திமுகவினர் சோனாப்பாடி கிராமத்திற்கு வாக்குச் சேகரிக்கச் சென்றனர். அப்போது, அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரவில்லை. எனவே, பிரச்சார வாகனம் கிராமத்தில் நுழையக் கூடாது என கூறி எல்லையிலே தடுத்து நிறுத்தினர்.
அப்போது, பிரச்சார வாகனம் முன்பு மூதாட்டி ஒருவர் படுத்து, அவர்களை ஊருக்குள் உள்ளே விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், பிரச்சாரத்திற்குச் செல்ல முடியாமல் திமுகவினர் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.