ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் பல காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் மகேந்திரகர் மாவட்டத்தில் GRL பப்ளிக் என்ற பள்ளியின் பேருந்து ஒன்று, நேற்று 40 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சென்றது.
அப்போது கனினாவின் உன்ஹானி கிராமம் அருகே சென்றபோது யாரும் எதிர்பாராதவிதமாக பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரம்ஜான் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டாலும், விதிகளை மீறி நேற்று பள்ளி இயங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான சுமார் 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற இந்த பேருந்து, நேற்று காலை 8.30 மணியளவில் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிப் பைகள், காலணிகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் படிப்புப் பொருட்கள் விபத்து நடந்த இடத்தில் சிதறிக்கிடந்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
விபத்து நடந்த வழியாக சென்ற பொதுமக்கள் , காயமடைந்த சுமார் 20 மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டுனர் மதுபோதையில் இருந்தாரா என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
பேருந்தை அதிவேகமாக செலுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, விடுமுறை தினத்திலும் பள்ளி ஏன் திறக்கப்பட்டது என்பதை விளக்குமாறு தனியார் பள்ளிக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் சீமா த்ரிகா தெரிவித்துள்ளார்.
வாகனத்தின் தகுதிச் சான்றிதழ் நீண்ட காலத்திற்கு முன்பே காலாவதியாகிவிட்டதாகவும், அதில் காப்பீடு மற்றும் பிற ஆவணங்கள் இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஐபிசி பிரிவு 109 (எந்தவொரு குற்றத்திற்கும் உடந்தையாக இருப்பவர்), 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல்), 304 (கொலை செய்யாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை), 336 (மனித உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவசரமாகவோ அல்லது அலட்சியமாகவோ இருப்பவர்), 337 (உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காயம் ஏற்படுத்துதல்), 120-பி (குற்றச் சதியில் பங்காளியாக இருப்பவர்) மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.