கோவையில் போதைப் பொருள் தடுப்பு ஆணையத்தின் அலுவலகம் அமைக்கப்படும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, வரதராஜபுரம் மேடு, வெங்கடேஸ்வரா தியேட்டர், நீலிகோணம்பாளையம் பேருந்து நிலையம், SIHS காலனி, சூர்யா கார்டன் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் உரையாற்றி அண்ணாமலை,
வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல்.
திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் என்று யாருமே இல்லை. வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுக, நாட்டிற்கு என்ன செய்ய முடியும்? இத்தனை ஆண்டுகளாக ஏன் எதுவும் செய்யவில்லை? இன்னொரு பக்கம், அஇஅதிமுக, தாங்கள் தேர்தலில் ஜெயித்தால் கோரிக்கைகளை வலியுறுத்துவோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தப் நாடாளுமன்ற உறுப்பினர் எதற்கு? மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டும்.
நமது பாரதப் பிரதமர்நரேந்திர மோடி பத்து ஆண்டு கால நல்லாட்சியில், நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலக அரங்கில், வலிமையான நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், கடந்த பத்து ஆண்டு காலமாக, நமது பிரதமர் அவர்களைப் பயன்படுத்தி, நமது கோவையை முன்னேற்ற, இதற்கு முன்பிருந்த கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறிவிட்டார்கள்.
அதை நாம் இந்தத் தேர்தலில் சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் உருவாகும். வரும் 2026 தேர்தலில் தமிழகத்தில் ஏற்படவிருக்கும் அரசியல் மாற்றத்திற்கு, இந்தப் பாராளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும்.
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக, ரூ.1,445 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் பாரதப் பிரதமர் மோடி அவர்கள். ஆனால், கோவை மாநகரில் நல்ல சாலைகள் கூட இல்லை. SIHS காலனியில், 14 ஆண்டுகளாக ஒரு பாலத்தை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மில் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீர்ப் பிரச்சினை தீர, வரதராஜபுரம் சாலையில், ஆக்கிரமித்து கட்டியிருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சுவரை இடித்து சாலைக்கான இடத்தை மீட்டெடுக்க, ஒண்டிப்புதூர் ராமச்சந்திரா நாயுடு சாலையில், பாலத்திற்கு இடம் கொடுப்பவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி மேம்பாலம் அமைக்க, கோவையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண, இந்த முறை தாமரையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மிகவும் அதிகரித்து விட்டது. நமது பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தைக் காக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை, இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்.
ஜூன் 4 தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 100 நாட்களில், கோவையில் போதைப் பொருள் தடுப்பு ஆணையத்தின் அலுவலகம் அமைக்கப்படும்.
கடந்த இருபது ஆண்டுகளாக தீர்க்கப்படாத மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் தீர்க்கப்படும். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது மக்கள் நலத் திட்டங்களை, முழுமையாகச் செயல்படுத்தி, நமது கோவை வளர்ச்சி பெற்றிட, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி, தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.