தமிழக மக்களுக்கு லஞ்ச லாவன்யம் இல்லாத மாற்று அரசை பாஜக கொடுக்க போகிறோம் எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி, பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, சகோதர சகோதரிகள் அடுத்த ஏழு நாட்களுக்கு தாமரை வணக்கம் என்று அலைபேசியில் சொல்ல வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
“எப்படி மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக தேர்வு செய்ய தயாராக இருக்கிறோமோ அதே போல என்னையும் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கு மாற்று அரசியல் கோவையிலிருந்து நடக்கும்.
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் நாளாக ஏப்ரல் 19 இருக்கும். 2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கத்தான் போகிறது. அதற்கான பிள்ளையார் சுழி கோவையில் போடப்பட இருக்கிறது. இதுவரை அலைபேசியில் ஹலோ என்று பேசிக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் அடுத்த ஏழு நாட்களுக்கு தாமரை வணக்கம் என்று சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
திமுகவினர் இதுவரை சம்பாதித்த மொத்த பணத்தையும், தங்கச் சுரங்கத்தையே இங்கு வந்து கொட்ட போகிறார்கள். ஆனால், மக்கள் நியாயத்தின் பக்கம்தான் நிற்பார்கள். தமிழக மக்களுக்கு லஞ்ச லாவன்யம் இல்லாத மாற்று அரசை பாஜக கொடுக்க போகிறோம்.
70 ஆண்டுகளாக பார்க்கும் இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில், குடிநீர் கூட 15 நாட்களுக்கு ஒருமுறை வருவதுடன், சாலை குண்டும் குழியுமாக உள்ளது எனக் குற்றம் சாட்டினார்.