நான் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவரும்கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தமிழக பா.ஜ.க தலைவரும், அந்தத் தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை இன்று வெளியிட்டார். அதில், ‘என் கனவு நமது கோவை’ என்ற பெயரில் 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்ற வாசகத்துடன், 250 மக்கள் மருந்தகங்கள், முதியோருக்கு மருத்துவ மையம், 3 உணவு வங்கிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
கோவையில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் விதிமீறி பிரசாரம் செய்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை,
”இரவு 10 மணிக்கு மேல் மக்களை சந்திக்க வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. 10 மணிக்கு மேல் மைக்கில் தான் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணைய விதி கூறுகிறது. நான் மைக்கை வைத்து பிரசாரம் செய்யும் வீடியோ இருந்தால் காட்டுங்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலையிடம் வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை, ”திமுக சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு என ஸ்டாலின், உதயநிதியிடம் போய் கேட்டீர்களா? அண்ணாமலைக்கு ஒரு மாதிரியும், ஆளும் கட்சிக்கு ஒரு மாதிரியும் பத்திரிகையாளர்கள் நடந்து கொள்கிறீர்கள். அறத்துடன் நடந்துக்கொள்ளுங்கள்” என்றார்.
திமுக டெபாசிட் இழக்கக்கூடிய முதல் தொகுதி கோயம்புத்தூர்தான். தோல்வி பயத்தில் திமுக இருக்கிறது. கவுன்டிங் ஆரம்பித்த மூன்று நான்கு சுற்றுகளிலேயே திமுக டெபாசிட் வாங்காது என தெரிந்துவிடும். அந்த அளவுக்கு மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.