டெல்லி கலால் கொள்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் எம்எல்சி கவிதாவை ஏப்ரல் 15ஆம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, பிஆர்எஸ் எம்எல்சி கவிதா உள்ளிட்டோர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திகார் சிறையில் உள்ள கவிதாவிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்வதாக அறிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கவிதாவுடன் குற்றம்சாட்டப்பட்ட புச்சி பாபுவின் போனில் இருந்து நிலம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 100 கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் கவிதா உண்மைகளை மறைக்க முயல்வதாகவும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராவில்லை என்றும் அவர் கூறினார். எனவே , கவிதாவை 5 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுப்ப வேண்டும் என அவர் வாதிட்டார்.
இதற்கு கவிதா தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏப்ரல் 15ஆம் தேதி வரை சிபிஐ விசாரிக்க அனுமதி அளித்தார்.