அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) நாடு தழுவிய நுகர்வோர் அமைப்பாகும். இது 820 கிளைகளை கொண்டது.
தமிழகத்தில் கடந்த 2005 -ம் ஆண்டு, அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட சென்னை திருவண்ணாமலை நேரடி ரயில் இதுவரை இயக்கப்படாமல் இருந்தது.
மாதந்தோறும் பௌர்ணமிக்கு மட்டும் சென்னை கடற்கரையிலிருந்தும், தாம்பரத்திலிருந்தும் சிறப்பு நீடிப்பு ரயில் சேவை சமீபகாலமாக உள்ளது. என்றாலும் லட்சக்கணக்கானவர்கள் கிரிவலம் செல்லும் நிலையில் இது பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.
சமீபத்தில் சென்னையில் வெளியூர் செல்லும் பேருந்து நிலையமும் இடமாற்றம் செய்யப்பட்டதால், திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள் மிகவும் அவதியடைந்தனர்.
இதனைப் போக்கும் வகையில், ஏ.பி.ஜி.பி. நுகர்வோர் அமைப்பு சார்பில் சென்னை திருவண்ணாமலை இடையே நேரடி இரயில் சேவைக் கேட்டு 50,000 பக்தர்கள் கையொப்பமிட்டு, ரயில்வே வாரியத்திடம் விண்ணப்பமாக சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பலனாக தமிழ் வருடப் பிறப்பு தருணத்தில் ஏப்ரல் 13 -ம் தேதி முதல் வாரந்தோறும் மூன்று நாட்கள், சென்னை பெரம்பூரிலிருந்து திருவண்ணாமலைக்கு காட்பாடி வழியாக முன்பதிவு படுக்கை வசதியுடன் கூடிய அதிவிரைவு ரயில் இயக்கப்படஉள்ளது. இதனை தென்னக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்பதிவு இல்லாத மூன்று பொது இருக்கை பெட்டிகளும் இதில் அடக்கம். இந்த ரயிலில் பெரம்பூர் -திருவண்ணாமலை கட்டணம் ரூ.125 மட்டுமே.
ஏ.பி.ஜி.பி நுகர்வோர் அமைப்பின் தொடர் முயற்சியால் சென்னை பெரம்பூரிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
இந்த முதல் ரயிலை ஏப்ரல் 13 -ம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 1.50 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையத்தில் வரவேற்று, ரயில் ஊழியர்களை ஏபிஜிபி பாராட்டி கௌரவித்தது.
திருவண்ணாமலைக்கு செல்லும் முதல் ரயிலில் ஏராளாமான ஏபிஜிபி தொண்டர்களும் ஏராளமான பக்தர்களும் திருவண்ணாமலை சென்றனர்.
புதிய ரயிலையும், அதில் பயணம் செய்தவர்களையும் திருவண்ணாமலையில் உள்ள இந்து அமைப்புகளும், பொது மக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மூன்று முறை மத்திய அரசுக்கு, ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கையெழுத்துக்களுடன் மத்திய அமைச்சர் மாண்புமிகு. முருகன் அவர்கள் மூலம், முதல் முறை பிரதமர், மற்ற இரு முறைகளில் ரயில்வே அமைச்சர் ஆகியோரிடம் மனுக்கள் தொடர்ந்து கொடுத்து, இது சாத்தியமாயிற்று .
விரைவில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயிலும் சாத்தியமாகும் என்று அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) தெரிவித்துள்ளனர்.