சென்னை அடுத்த குன்றத்தூரில் 400 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.
அதே நேரத்தில், வாக்காளர்களுக்குப் பரிசு, பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும்படையினர் தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பறக்கும் படையினர் சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணங்கள் இன்றி மினி லாரியில் 400 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது.
வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு, தனியார் ஜூவல்லரி கடைகளுக்காக சப்ளை செய்ய மண்ணூரில் உள்ள சேமிப்பு குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.