மக்களின் அடிப்படை குறைகளை தீர்க்க ஏரியா சபை கூட்டத்தை தேர்தல் விதிமுறைகளுக்கு உடபட்டு நடத்தலாமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அரசுத்துறை செயளாலருக்கு உத்தரவிட்டும் தமிழக அரசு ஏரியா சபை கூட்டத்தை நடத்தாமல் மெத்தனமாக உள்ளது.
தமிழகத்தில் 22 மாநகராட்சிகள் உள்ளது. மேலும் புதியதாக 4 மாநகராட்சிகள் உருவாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள 12,000 கிராமங்களில் மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பான தெரு விளக்கு, உள்ளிட்டவைகளை மக்கள் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார்கள், சில கிராம சபை கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்வர்.
அதேபோல் மாநகராட்சிகளில் ஏரியா சபை கூட்டம் நடத்துவதற்காக திமுக அரசு கடந்த ஆண்டு 23-05-2023 அன்று உத்திரவிட்டது. இதில் நான்கு முறை ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதில் மக்கள் பிரச்சனைகள் உடனடியாக கேட்டு தீர்க்கபடுமென தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் தேதியும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியும், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியும், சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் தேதியும் எரியா சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் திமுக அரசு அமைத்து இதுவரை எந்த மாநகராட்சிகளிலும் முழுமையாக ஏரியா சபை கூட்டம் ஒருமுறை கூட நடத்தப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் கடந்த முறை பெயரளவில் இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் ஏரியா சபை கூட்டம் நடத்தியதாக கூறப்பட்டது.
ஆனால் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று ஏரியா சபை கூட்டம் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் ஏரியா சபை கூட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் நடைபெறவில்லை.
ஏரியா சபை கூட்டத்தில், சாலை பிரச்சனைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதலில் உள்ள பிரச்சனைகள், தெருவிளக்குகள் பூங்காக்கள் புதர் மண்டி கிடப்பது, சிறிய மழைக்கே ஆறு போல் தெருக்களில் தேங்கும் தண்ணீர், தெருக்களை தரம் உயர்த்துவது குறித்து, குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த பொறியாளர்கள் வார்டு கவுன்சிலர்களிடம் மக்கள் நேரடியாக கேள்வி எழுப்ப முடியும்.
சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணிகளின் மெத்தனத்தால் மிக்ஜாம் புயல் சென்னை மாநகராட்சியின் பணிகளை அம்பலப்படுத்தியது. இந்த தேர்தலிலும் ஏரியா சபை கூட்டம் நடத்தினால் அம்பலப்பட்டு விடுவோம் என்று ஏரியா சபை கூட்டத்தையே நடத்தாமல் சென்னை மாநகராட்சி மெத்தனம் காட்டியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலரான வழக்கறிஞர் சங்கர் ஏரியா சபை கூட்டம் நடத்த வேண்டும் தங்களின் அடிப்படை பிரச்சனைகளை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கும் ஏரியா சபை கூட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்திருந்தார.
ஆனால் தேர்தல் காலம் என்பதால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் அவரிடமும் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனை பரிசீலித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஏரியா சபை கூட்டம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறையின் முதன்மைச் செயலாளருக்கு நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.
ஆனால் அனுமதி கிடைத்தும், எந்த வகையிலும் செவி சாய்க்காத சென்னை மாநகராட்சியும், தமிழகத்தில் உள்ள பல மாநகராட்சிகளிலும் இன்று ஏரியா சபை நடத்தாமல், மாநகராட்சி ஆணையர்களே இருட்டடிப்பு செய்துள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் ஏரியா சபை நடத்தவில்லை என தமிழக அரசிடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இது குறித்து தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலுகாக மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் திமுகவோ ஏரியா சபை கூட்டம் குறித்து வாய் திறக்காமல் அமைதிகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.