சமூகநீதிக்கு இலக்கணமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால நல்லாட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி கோவனூர் பஸ்தி, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், மணியக்காரன்பாளையம், பூசாரிபாளையம், R.S.புரம், சித்தாபுத்தூர், பகுதிகளில், திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகர் சரத் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, அண்ணலின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.
கூட்டத்தில் உரையாற்றி அண்ணாமலை,
அண்ணலின், கனவுகளை எல்லாம் மெய்ப்படுத்தும் விதமாக, சமூகநீதிக்கு இலக்கணமாக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால நல்லாட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சரவையில் 12 பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 27 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
8 பேர் பெண்கள். நாட்டின் குடியரசுத் தலைவர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். அண்ணலின் கனவுகளான, அரசியல் பிரதிநிதித்துவமும், சமத்துவமும், சமூகநீதியும், முன்னெப்போதையும் விட, நமது பிரதமர் மோடி அவர்களது ஆட்சியில்தான் முழுவதுமாக நிலைநாட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து, அண்ணல் அம்பேத்கர் வழியில் நமது அரசு செயல்படும்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாக வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழல், குடும்ப அரசியலின் பிடியிலிருந்து விலகி, வளர்ச்சிப் பாதையில் தமிழகம் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளும், நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
நமது கோவை தொகுதி, அதில் முதல் தொகுதியாக இருக்க வேண்டும். நாடு வளர்ச்சியடையும்போது, கோவையும் வளர்ச்சி அடைய வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக, கோவையின் வளர்ச்சியை முடக்கி வைத்த கட்சிகளைப் புறக்கணித்து, பாரதப் பிரதமரின் வளர்ச்சி அரசியலை கோவை முன்னெடுக்கவிருப்பது உறுதி.
இந்தப் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் செங்கல் சூளை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பழங்குடியினருக்கு வீடு, குடிநீர் வசதி, நீர் நிலைகள் மேலாண்மை, ஒவ்வொரு பஞ்சாயத்து தாய் கிராமங்களிலும் விளையாட்டு மைதானம், கிராமங்களை ஒன்றிணைத்து, விளையாட்டு உபகரணங்கள், காபி, மிளகு தோட்டம் வேலைவாய்ப்பு என அனைத்துப் பிரச்சினைகளுக்கும், முழுமையான தீர்வு கொண்டு வரப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் பொறுப்பேற்பது, அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். எனவே, நமது பிரதமர், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நமது கோவை தொகுதியும் துணை இருக்க வேண்டும்.
கோவையின் உட்கட்டமைப்பு மேம்பட, தரமான, உறுதியான சாலைகள் அமைந்திட, குடிநீர்ப் பிரச்சினைகள் தீர, பாரதப் பிரதமர் மோடி அவர்களின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, கோயம்புத்தூரின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, வளர்ச்சியின் சின்னம், நம்பிக்கையின் சின்னமாம் தாமரை சின்னத்தில் கட்சி வேறுபாடின்றி வாக்களித்து, தமிழகத்தின் நேர்மையான அரசியல் மாற்றம் கோயம்புத்தூரில் இருந்து தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.