திமுகவின் திருமங்கலம் பார்முலாவுக்கு மாற்றாக, வாக்குக்குப் பணம் கொடுக்காமல், பொதுமக்களின் முழு அன்புடனும், ஆதரவுடனும் வெற்றி பெற்று, கோயம்புத்தூர் பார்முலா என்றால் என்ன என்பதை நாம் நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்துவோம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி கண்ணம்பாளையம், சின்ன கலங்கல், சூலூர், மதியழகன் நகர் பகுதிகளில், திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் காமராஜர் மக்கள் கட்சி நிறுவனர் தமிழருவி மணியன் பங்கேற்று உரையாற்றினார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
நாடு முழுவதும், 98 கோடி மக்கள் வாக்களித்து பிரதமரைத் தேர்ந்தெடுக்கவிருக்கும் தேர்தல் இது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் நமது பிரதமர் என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். நமது பிரதமர் அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சி, ஏழை எளிய மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தாய்மார்கள் என சாமானிய மக்களுக்கான ஆட்சி. நமது பிரதமர் அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரைப் பயன்படுத்தி, நமது தொகுதிக்கான வளர்ச்சியை எப்படி பெறுவது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில், இத்தனை ஆண்டுகளாக, இரண்டு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களித்து, ஏமாற்றம் அடைந்ததுதான் மக்கள் அடைந்த பலன். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருள் விற்பனை, வாரிசு அரசியல், ஊழல் என இவற்றைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே தவிர, வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இரண்டு திராவிடக் கட்சிகளும் முன்வரவில்லை. இந்த முறை, நாம் அதனை மாற்றிக் காட்டுவோம்.
நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்காததால் கோவை, கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், வறட்சிக்குள்ளாகும் வாய்ப்பும் இருக்கிறது. இவற்றைத் தடுக்க, கோவையின் நீர்நிலைகள் அனைத்தையும் சீரமைப்பது நமது தலையாய பணியாக இருக்கும்.
கடந்த 70 ஆண்டுகளாக, வெறும் அறிவிப்பு அளவிலேயே இருக்கும் ஆனைமலை – நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்தினால், 8 டிஎம்சி அளவுக்கு தண்ணீரைச் சேமிக்க முடியும். இதன் மூலம், விவசாயத்துக்கான தண்ணீர் முழுமையாகக் கிடைக்கும். இதற்கு ஆகும் செலவான ரூ.10,000 கோடியை, நமது பிரதமர் அவர்களிடம் இருந்து பெற்று, ஆனைமலை நல்லாறு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதனுடன், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டமும் செயல்படுத்தப்படும். கோவை எந்தக் காலத்திலும் வறட்சிக்குச் செல்லாதவாறு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது பணிகள் இருக்கும்.
ஜூன் 4 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர், தொகுதி மேம்பாட்டுக்கான முதல் நிதியில், கலங்கலில், ஐயா ஜி.டி.நாயுடு அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று உறுதியை அளிக்கிறேன்.
அதோடு, கோவையின் உட்கட்டமைப்பு மேம்பாடு, தரமான சாலைகள், அனைத்தும் அமைக்கப்பட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்காகக் கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களும், முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்ற உறுதியையும் அளிக்கிறேன்.
நமது குழந்தைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைப்பதையும், கல்விக்கேற்ற வேலைவாய்ப்புகள் கிடைப்பதையும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிச்சயம் உறுதி செய்வோம். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து, நாடு முழுவதும் நம்மை தரம் தாழ்த்திய திமுகவின் திருமங்கலம் பார்முலாவுக்கு மாற்றாக, வாக்குக்குப் பணம் கொடுக்காமல், பொதுமக்களின் முழு அன்புடனும், ஆதரவுடனும் வெற்றி பெற்று, கோயம்புத்தூர் பார்முலா என்றால் என்ன என்பதை நாம் நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்துவோம்.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது மக்கள் நலத் திட்டங்களை, முழுமையாகச் செயல்படுத்தி, நமது கோவை வளர்ச்சி பெற்றிட, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி, தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.