செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், ஏப்ரல் 17 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து புழல் சிறையிலிருந்து காணொளிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 17 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 32-ஆவது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.