மீண்டும் மோடி ஆட்சி என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
கடந்த 2004 – 2014 ஆண்டுகளில், திமுக காங்கிரஸ் உள்ளிட்ட இதே இண்டி கூட்டணி கட்சிகள், பிரதமர் யார் என்றே அறிவிக்காமல் சுமார் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்து ஆட்சி நடத்தினர். தற்போது மீண்டும் அதே போன்ற ஊழல் ஆட்சியைக் கொண்டு வர, பிரதமர் யார் என்றே அறிவிக்காமல் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் இம்முறை, மீண்டும் மோடி ஆட்சி என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால நல்லாட்சி, ஏழை எளிய மக்கள், தாய்மார்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கான ஆட்சியாக அமைந்தது. வரப்போகும் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் முதன்மை நாடாக நமது நாடு உருவாவதற்கு அடித்தளம் அமைக்கும் ஆட்சியாக அமையும்.
கடந்த பத்து ஆண்டுகளில், நமது கோவையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கி விட்டது. பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தாமல்,கோவையின் சாலைகள் குண்டும் குழியுமாக, குடி தண்ணீர், பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் என அனைத்தும் பற்றாக்குறையாக இருக்கிறது.
இதனைச் சரி செய்ய, நமக்கு, நமது பிரதமரின் திட்டங்களை, ஊழல் இல்லாமல், முழுமையாகச் செயல்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் தேவை. கோவை பாராளுமன்றத் தொகுதியின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேரடிப் பார்வையில் தீர்வு கிடைத்திட, கோவை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணித்திட, நமது குழந்தைகளின் எதிர்காலம் சிறந்திட, நமது இளைஞர்கள், தாய்மார்கள் முன்னேற்றம் பெற்றிட, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.