பெண்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பெண் அதிகாரிகள் பாடுபட வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி (ஐ.இ.எஸ்) அதிகாரிகள் குழுவினர் (2022 மற்றும் 2023 தொகுப்புகள்) இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர்,
நாட்டின் வளர்ச்சியில் பொருளாதார மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார். பேரியல் மற்றும் நுண் பொருளாதாரக் குறியீடுகள் முன்னேற்றத்தின் பயனுள்ள அளவீடுகளாகக் கருதப்படுகின்றன. எனவே, அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் பயனுள்ளவையாக மாற்றுவதில் பொருளாதார வல்லுநர்களின் பங்கு முக்கியமானதாகும்.
உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா முன்னேறி வருவதால், அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தவும் வரும் காலங்களில் எண்ணற்ற வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார். இந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2022 மற்றும் 2023 தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள ஐ.இ.எஸ் அதிகாரிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண் அதிகாரிகள் என்பதைக் குறிப்பிட்டு குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது இந்தியாவின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தீர்மானத்தை நிறைவேற்ற உதவும் என்று அவர் கூறினார். பெண்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பெண் அதிகாரிகள் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கொள்கை தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்போது, அல்லது பணியிடத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது, நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவினரின் நலனை இளம் அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும் என்பதைக் குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார்.