பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதற்கு எனக்கு உடன்பாடில்லை, மக்கள் பணத்திற்காக வாக்களிக்க மாட்டார்கள், எனது வெற்றியை எனது துரோகிகளால் ஒன்றும் செய்ய முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான டிடிவி. தினகரன் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய டிடிவி. தினகரன்,
முல்லைப் பெரியாறு அணை 152 அடியாக நிலை நிறுத்துவது, நமது மாநில உரிமையை பாதுகாத்து விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் நிதி உதவி பெற்று வைகை அணை முறையாக தூர்வரப்படும். தமிழக கேரளா இணைக்கும் வழித்தடமான தேவாரம் சாக்கலூத்து மெட்டு ரோடு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்மா ஆட்சியில் தேனி மாவட்டத்தில் கொண்டுவர வரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் குறிப்பாக 1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்டிப்பட்டி தெப்பம்பட்டி துப்பறிவு அனைத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்.
கண்ணகி கோட்டம் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்து சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். திண்டுக்கல் சபரிமலை ரயில் சேவை தொடங்குவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிக்கைகளை தெரிவித்தார்.
இயற்கை சார்ந்த தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படும். இயற்கையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளேன். இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையிலும் விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையிலும் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும். அதேபோன்று தேனி இயற்கை சார்ந்த வளமாய்ந்த பகுதி என்றாலும் வளர்ச்சிக்கான திட்டமாக இங்கு விமான நிலையம் ஏற்படுத்தப்படும்.
விவசாயிகளுக்கு இயற்கையின் அளவு பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைக்கப்படும். அதற்கு மக்கள் வாய்ப்பளியுங்கள் மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைந்த உடன், நான் செயல்படுத்தும் திட்டங்களை நிச்சயம் அவர்கள் செயல்படுத்தி தருவார்கள். மேலும் திப்பரேவு தொப்பம்பட்டி அணையும் கட்டப்படும்.
ஓட்டுக்கு பணம் வழங்குவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், கடந்த முறை நான் தோல்வி அடைந்தபோது 21 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தேன். தோல்வியடைந்ததை குறித்து விமர்சிக்க நான் விரும்பவில்லை. மக்கள் தற்போது வரை கேட்கும் உதவிகளை நான் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
மக்களுக்குத் தெரியும் நான் செய்த நலத்திட்டங்கள். தேர்தலுக்கு பணம் வழங்கும் முறை என்பது நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என்னால் கொடுக்க முடியாது என்று இல்லை. ஆனால் மக்களுக்கான உதவிகளை மட்டும் நான் செய்துள்ளேன்.
தேனி மக்களை உறவினர்களாக நினைக்கிறேன். அவர்களுக்கு 300, 500 என்று கொடுப்பது எனக்கு உடன்பாடு கிடையாது. ஓ பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதி புதிய தொகுதி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு என்னுடன் வந்திருந்தார். ஒன்றாம் தேதி தான் அங்கு அவர் சென்றுள்ளார், அங்கு அவருடைய தேர்தல் பணி காரணமாக அவர் எனக்கு பிரச்சாரம் செய்ய வரவில்லை மத்தபடி ஒன்றும் கிடையாது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் வர வேண்டாம் எனது மனைவி அனுராதாவை அனுப்புங்கள், உங்களைக் காட்டிலும் அதிக கூட்டம் அவர்களுக்கு வருகிறது, போகும் இடம் எல்லாம் அனுராதாவை பிரச்சாரத்திற்கு அனுப்புங்கள் என தேனி பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
என்னுடன் இருக்கும் கட்சியினரும் சமூக வலைதளங்களில் என்னை காட்டிலும் அதிகமான பார்வையாளர்கள் மனைவிக்கு இருப்பதாகவும் என்னிடமே கூறுகின்றனர். எனது மனைவி அனுராதா பக்குவமானவர் அவர் பக்குவமாக கையாள்வார். எனது மனைவி அத்தை மகள் தான் நீங்கள் எல்லாம் என்னை லட்சணமாக இருப்பதாக கூறுவதால் அவருக்கு பொறாமை, என்னை குக்கர் முகம் டிடிவி என அவர் கூறியுள்ளதாக கலகலப்பாக தெரிவித்தார். அண்ணாமலையின் பிரச்சாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்று கூறினால் பிராக்கெட்டில் டிடிவி தினகரன் இருப்பேன் அதேபோன்று டிடிவி தினகரன் என கூறினால் பிராக்கெட்டில் ஓ பன்னீர்செல்வம் இருப்பார். எந்த வேறுபாடும் கிடையாது என்று பேசினார்.
எந்த லட்சியத்தை முன்னிறுத்தி நம் இயக்கம் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) தொடங்கப்பட்டதோ, அந்த இலக்கை எட்டும் வரையில் ஓயமாட்டோம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நேர்மையான பாதையில் துடிப்பான தொண்டர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
இயற்கை வளப் பாதுகாப்பு, சமூகநீதி, பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கான எண்ணற்ற கொள்கைகளை கொண்டிருக்கும் நமது இயக்கம் எட்டியிருக்கிறது. அதற்கான முதல் நாடாளுமன்றத் தேர்தலை வலுவான சந்திக்கின்றோம்.
வெற்றிக்கான பாதையை படியாக அமைந்திருக்கும், கூட்டணி அமைத்து பாரதப் பிரதமர் மோடி அவர்களை மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமரவைப்பதன் மூலம் உலகநாடுகள் மத்தியில் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றவும், பொருளாதார ரீதியாக நம் நாடு முன்னேற வழிவகுக்கவும் உதவும் என்பதை மக்கள் அனைவரும் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.