நாகை அருகே குடிநீர் போர்வெல் அமைக்கும் பணியின் போது மின் கம்பியில் உரசி ஒருவர் பலி மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காரைநகர் கிராமத்தில் பாலையன் என்பவரது வீட்டில் போர்வெல் மூலம் குடிநீர் கைப்பம்பு அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் காரப்பிடாகை ஸ்டாலின் நகர் பகுதியைசேர்ந்த சந்திரசேகர், திருப்பூண்டி முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்த அருள்பழனி ஆகிய இரண்டுபேரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது போர்வெல் துளையிட்ட பின்பு மேலே தூக்கும்போது இரும்பு பைப்பானது மேலே உள்ள மின் கம்பியில் எதிர்பாராத விதமாக உரசியது.
இதில் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அருள் பழனி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கீழையூர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.