ஐபிஎல் தொடரில் இருந்து சிறுது ஓய்வு தேவைப்படுவதாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐயின் பேட்ஸ்மேனுமான கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தாங்கள் விளையாடிய 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் சரியாக விளையாடிவில்லை. அதேபோல் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்குபெறவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து சிறுது ஓய்வு தேவைப்படுவதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ” நான் கடந்த போட்டி முடிந்தவுடனேயே நேராக டு பிளெசியிடமும் பயிற்சியாளர்களிடமும் சென்று எனக்கு பதில் வேறு வீரரை ஆடவைப்பதற்கான தருணம் இது என்று கூறினேன்.
எனக்கு கடந்த காலத்திலும் இப்படி நடந்துள்ளது. எனவே, எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இடைவேளை தேவை என்பதை உணர்ந்தேன். மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்புக் கிடைக்குமானால் அதற்குள் நான் என் உடல் மற்றும் மன நிலையை திடப்படுத்திக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.