தமிழக – கேரள எல்லையில் பழுதாகி நின்ற சிமெண்ட் லாரியால் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதனால் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக கேரளா எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடி வழியாக நாள்தோறும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
இதில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் கனரக வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தமிழகத்திலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி ஒன்று எஸ் வளைவு பகுதியில் பழுதாகி நின்றது.
இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழக பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து புளியரை காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர்.