உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது, நீட் தேர்வை எடுத்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படிப்பட்ட ஒரு அரசியல் எங்களுக்கு தேவையில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவையும் திமுகவையும் கடுமையாக விமர்சிக்கிறார்.
கோவை மக்களவைத் தொகுதி, சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் யாருமே தொகுதி பக்கமே வருவதில்லை. நான் வெற்றி பெற்றதும் நீங்கள் என்னை அணுகும் வகையில் நான் இருப்பேன். இந்த தொகுதியின் நிலை அடுத்த கட்டத்திற்கும் உயரும். இந்த கேள்விகளையெல்லாம் இத்தனை ஆண்டுகளாக நீங்கள் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. எத்தனை பேர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வேண்டாம் என்கிறீர்கள்? முதலில் ஆறு வரியாக செலுத்தி வந்ததை ஜிஎஸ்டி என ஒரே வரியாக கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி இல்லாமல் எப்படி மக்கள் பணி மேற்கொள்வது.
அதிகாரிகளுக்கு எப்படி ஊதியம் வழங்குவது சொல்லுங்கள்? இவர்களுக்கு ஊதியம் கொடுக்க பிரதமர் மோடி என்ன ரூபாய் நோட்டை அச்சடித்து வருகிறாரா என்ன? இன்னொன்று நீட் தேர்வு குறித்து கேட்டீர்கள். அதாவது எங்களின் உயிரே போனாலும் நீட் தேர்வை எக்காரணம் கொண்டும் ரத்து செய்ய மாட்டோம்.
முதல்முறையாக ஏழை மாணவ, மாணவியர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்கிறார்கள். நீட் தேர்வை எடுத்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படிப்பட்ட ஒரு அரசியல் எங்களுக்கு தேவையில்லை.
கிராமப்புற ஏழை மாணவர்கள் நீட் தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியும். இல்லாவிட்டால் திமுக அமைச்சர்களின் மருத்துவக் கல்லூரியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்துதான் படிக்க முடியும். இப்படி கோடிக்கணக்கான பணத்தை ஏழைகளால் செலவு செய்ய முடியுமா? எந்த மாணவர்களும் நீட் தேர்வு காரணமாக இறக்கவில்லை, அவர்களை தூண்டுவிடுகிறார்கள்.
2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை காவிரி பிரச்சினை இல்லை. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் பிரச்சினை ஏற்படத் தொடங்கியது. நதி நீர் இணைப்புக்கு ரூ 2.50 லட்சம் கோடி ரூபாய் வேண்டும். இவ்வளவு பணம் தமிழக அரசிடம் உள்ளதா, உங்கள் ஊரில் குடிநீரையே தமிழக அரசால் சரிவர வழங்க முடியவில்லையே இதில் நதி நீர் இணைப்புக்கு எப்படி முன்வருவார்கள் என கேள்வி எழுப்பினார்.