சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு மக்களவைத் தொகுதியில் இரு முறை வெற்றி பெற்ற ஜுகல் கிஷோரை பாஜக மீண்டும் களமிறக்கி உள்ளது. அவருக்காக வாக்கு சேகரிக்க ஜம்முவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அமித் ஷா,
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
காஷ்மீர் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் பாஜக செயல்பட்டு வருகிறது. பாஜக தனது செயல்பாடுகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் மனங்களை வென்றுள்ளது.
வாக்குகளைப் பெறுவதைவிட மக்கள் நலனுக்காக சிறப்பாக செயல்படுவதன் மூலம் அவர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதுவே பாஜகவுக்கு தேர்தல்களில் வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது.
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இதுநாள் வரை காஷ்மீர் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன. ஜம்மு- காஷ்மீரில் ஜனநாயகம் மேம்படக் கூடாது என்பதில்தான் இக்கட்சிகள் கவனம் செலுத்துகின்றன.
மக்களின் பாதுகாப்பு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து அவர்களுக்கு அக்கறை கிடையாது. தங்கள் அரசியல் லாபத்துக்காக காஷ்மீர் மக்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள்.
காஷ்மீரில் போலி என்கவுண்ட்டர்களை நடத்தியதும், இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இங்கு முன்பு ஆட்சியில் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவைதான் காரணம்.
கடந்த 70 ஆண்டுகளாக பயங்கரவாதம், வன்முறை, கல்வீச்சு, பிரிவினைவாதம் ஆகியவற்றால் காஷ்மீர் பின்தங்கிவிட்டது. காஷ்மீரும் நாட்டின் மற்ற பகுதிகளைப் போல வளர வேண்டும். இந்த மண்ணின் மக்களுக்கு அனைத்து பயன்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.
சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் பல முறியடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.