சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22ல் நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்த நிலையில், வழக்கு தொடர்பாக வங்கி ஆவணங்களின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டி இருப்பதால், வழக்கில் இருந்து விடுவிக்ககோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வங்கியில் இருந்து அளிக்கப்பட்டுள்ள அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால் வங்கியின் அசல் ஆவணங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் செந்தில் பாலாஜிக்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜியை வரும் 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டும் என சிறைத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.