பழனி அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு, பழனி சட்டமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதி டி.கே.என்.புதூரில் வசிக்கும் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, 90க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல மாதங்களா தங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கேட்டும் எதுவும் செய்து தரவில்லை என்றும் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராததால் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆயக்குடி போலீசார் வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால் கூட்டமாக சேராமல் அனைவரும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொது மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.