மத்திய சென்னை தொகுதியில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீரான முறையில் இயங்குகின்றன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் மாலை 5 மணி வரை 63.02 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தர்மபுரியில் 67.52, நாமக்கல் 67.37, ஆரணி 67.34, தென்சென்னை 57.4, வடசென்னை 59.06, மத்திய சென்னை 57.25 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.
வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி, புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி மற்றும் திருத்தங்கள் என கடந்த செப்டம்பர் மாதம் வரை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதில் விடுபட்டவர்கள் கடைசி நேரத்தில் விண்ணப்பித்து இருந்தால், அவர்கள் பெயர் மற்றும் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இருக்காது.
மத்திய சென்னை தொகுதியில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீரான முறையில் இயங்குகின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என புகார் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து தேர்தல் பார்வையாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். அப்படி ஆய்வு செய்யும் போது இயந்திரம் மிகச் சரியாகவே வேலை செய்தது. எனவேதான் நாம் தமிழர் வேட்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு குறித்து முழுமையாக ஆய்வு செய்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும்’ எனத் தெரிவித்தார்.