ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் மாயமாகினர்.
சத்தீஸ்கரில் உள்ள கர்சியா பகுதியில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு ஒடிசாவின் மகாநதி ஆற்றின் வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.
ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு அதிகரித்த நிலையில், நிலைதடுமாறி, படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஒடிசா மாநில பேரிடர் அதிவிரைவு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் 48 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். ஆனால் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணாமல் போன ஏழு பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இருப்பினும் 10க்கும் மேற்பட்டோர் மாயமானதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்ததால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்று காலை வரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாயமான மேலும் 7 பேரை தேடும் பணிக்காக ஸ்கூபா வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.