மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலில் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், 542 வாக்கு பதிவு மையங்களில் 1,573 வாக்குச்சாவடிகள் வாயிலாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கக் கூடிய வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ், மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகள் சீல் வைக்கப்பட்டது.
அங்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய காவல் துறை மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் 285 சிசிடிவி கேமராக்கள் வாயிலாக 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது