இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகள், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஆசியாவில் இரண்டாவது பெரிய ராணுவத்தை கொண்டுள்ள இந்தியா, ஒவ்வொரு நாளும் ராணுவத்துறையில் புதிய ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்களை இணைத்து அதிநவீனமயமாக்கி வருகிறது
அதன் ஒரு பகுதியாகத் தான் பிரமோஸ் ஏவுகணைகள் இந்திய ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டன. பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற நதிகளின் பெயர்களின் இணைவே ‘பிரமோஸ்’.
நீர்,நிலம்,வான் பரப்பில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த ஏவுகணைகள் இந்தியாவின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டன. உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றிலும் சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு இந்தியா தான்.
பிரமோஸ் ஏவுகணையின் வேகம், சீறிப்பாயும் வேகம் ஆகியவை தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகின்றன. ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் பயணிக்கும் இந்த பிரமோஸ் ஏவுகணை நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய திறனுடன் விளங்குகிறது.
இந்திய ராணுவத்தின் அடையாளமாக பார்க்கப் படும் பிரமோஸ் வகை ஏவுகணை தான் உலகின் முதல் அதிவேக சூப்பர் சானிக் ஏவுகணையாகும். தொடக்கத்தில் இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரமோஸ் இப்போது, ‘மேக் இந்த இந்தியா’ திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மணிக்கு 3000 கி.மீ வேகத்தில் சீறி பாயும் அதிவேக சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணைகளுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரமோஸ் ஏவுகணையின் பெருமையைச் சொல்லவேண்டுமென்றால் இப்படி சொல்லலாம்.
உக்ரைனுக்கு எதிரான போரில் பிரமோஸ் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியது . இந்த ஏவுகணைகளை உக்ரைன் இராணுவத்தினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த உண்மையை அறிந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை கேட்டு இந்தியாவுக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
2022 ஆம் ஆண்டு 2700 கோடி ரூபாய் மதிப்பிலான பிரமோஸ் ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டன. அதன்படிஇந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட பிரமோஸ் ஏவுகணைகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
எல்லாத் துறைகளிலும் அபரிதமான வளர்ச்சியைக் கண்டு வரும் புதிய இந்தியாவில், 2023- 2024 ஆண்டில் பாதுகாப்புத் துறை 21,083 கோடி ரூபாய்க்கு ராணுவ ஏற்றுமதி நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 32.5 சதவீதம் அதிகம் என்பது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இந்திய பசிபிக் புவிசார் அரசியலில் மாற்றங்கள் நடந்து வரும் சூழலில் இந்திய இராணுவத்தின் ஏற்றுமதி சாதனைகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.