வைகை அணையில் குளிக்கச் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர்கள் வேல்ராஜ் என்பவரது மகன் லோகேஷ்வரன். அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சுந்தரபாண்டி. இவர்கள் இருவரும் இரண்டு வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று பொது விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் சிலருடன் வைகை அணை முன்புறம் வைகை ஆற்றில் உள்ள தடுப்பணைக்கு நேற்று மாலை குளிக்க சென்றனர்.
ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது ஆற்றில் சுழலில் சிக்கி லோகேஸ்வரன் மற்றும் சுந்தரபாண்டி தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
இதையடுத்து அவர்களுடன் வந்த அவரது நண்பர்கள் உடனடியாக வைகை அணை காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த வைகை அணை காவல்துறை மற்றும் ராமலிங்கபுரத்தில் இருந்து வந்த மாணவர்களது உறவினர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக தண்ணீரில் மூழ்கி இருவரின் உடலை மீட்டனர்.
இதையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.