மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். இந்த நிலையில், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதனைதொடர்ந்து திருமலைநாயக்கர் வழங்கிய செங்கோல் அம்மனுக்கு வழங்கப்பட்டதை அடுத்து தீபாராதனைக் காட்டப்பட்டது. செங்கோலை பெற்ற அறங்காவல்குழு தலைவர் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை திருக்கல்யாண வைபவமும், 22 ஆம் தேதி சித்திரை வீதிகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.