கர்நாடகாவில் கல்லூரி மாணவி ஒருவர் ஒரு தலை காதல் விவகாரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லவ் ஜிகாத் பிரச்சனையாகவும் இது வெடித்திருக்கிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், தார்வாட் மாநகராட்சியில் கவுன்சிலராகவும் இருக்கும் நிரஞ்சன் ஹிரேமத்தின் மகளான நேகா, ஹூப்ளியில் உள்ள கர்நாடக தொழில் நுட்ப பல்கலைகழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரை கல்லூரி வளாகத்தில் வைத்து ,கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வியாழக் கிழமை முகமூடி அணிந்து வந்த 23 வயதான கல்லூரி மாணவர் பயஸ், 7 முறை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி குரூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹூப்ளி காவல் துறை யினரால் கைது செய்ய பட்ட பயஸ் , ‘நேகா முதலில் தம்மை காதலித்தாகவும், பிறகு அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பால் தம்மை விட்டு விலகியதால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேகாவின் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோருக்கு பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாஜகவும் இந்திய நாட்டு மக்களும் நேகா குடும்பத்துடன் இருக்கிறது. நேகாவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும். இந்த வழக்கில் கர்நாடக காங்கிரஸ் அரசு கூறும் பொய்களை, மக்கள் ஏற்க மாட்டார்கள். கர்நாடக காவல் துறையால் இந்த வழக்கை விசாரிக்க முடியாவிட்டால், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்தக் கொலையை, லவ் ஜிஹாத்தின் விளைவு என்றும், கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்றும் கூறி இருக்கிறார்.
பா.ஜ.க-வை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இந்த கொலையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தும், நேகாவின் கொலையைக் கண்டித்திருப்பதுடன் கொலைசெய்த நபருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
கொலையான நேகாவின் தந்தை நிரஞ்சன் ஹிரேமத், `தமது மகளுக்கு நடந்ததை ஒட்டுமொத்த மாநிலமும், நாடும் பார்த்ததாக கூறியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் இது நடந்தது என்று எப்படி முடிவு செய்ய முடியும் என்றும், தமது மகள் அடைந்த அதிர்ச்சியை இனி எந்தப் பெண்ணும் இந்த நாட்டில் சந்திக்கக் கூடாது என்றும், லவ் ஜிஹாத் வேகமாகப் பரவி வருவதாக தாம் உணர்வதாகவும் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
கொலை செய்த பயஸின் தாய் மும்தாஜ் கூறுகையில், `தமது மகன் செய்தது தப்புதான்’ என்றும், கர்நாடக மக்கள் அனைவரிடமும், அந்தப் பெண்ணின் பெற்றோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.
தம் மகன் காதல் தொந்தரவு செய்வதாக நேகாவின் குடும்பத்தினர் தம்மிடம் புகார் தெரிவித்தனர் என்று கூறியுள்ள பயஸின் தந்தை, ஆனால் யாரும் செய்ய துணியாத இது போன்ற கொடூரச் செயலை செய்த தம் மகனுக்கு சட்டம் கடுமையான தண்டனை கொடுக்கட்டும் என பயசின் தந்தை தெரிவித்துள்ளார்
லவ் ஜிகாத்தின் காரணமாக ஒரு கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இனியாவது இந்தியாவில் நடக்க கூடாது என்றும், அதற்கு மத்திய அரசு கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.