மாலத்தீவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சு தலைமையிலான மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றிருக்கிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு!
மாலத்தீவின் 20-வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடை பெற்றது. 93 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக 368 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
அதில் 130 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். அதிபர் முகமது முய்சு தலைமையிலான மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி கட்சி 90 தொகுதிகளிலும் முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 89 இடங்களிலும் போட்டியிட்டன.
284,663 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இந்தத் தேர்தலில் 72.96% வாக்குகள் பதிவாகின.
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் அதிபராக இருந்த முகமது முய்சுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு காட்டி வந்த சூழலில் நடைபெற்ற இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன .
தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அதிபர் மீது ஊழல் குற்றச் சாட்டு வந்த நிலையிலும், மொத்தமுள்ள 93 இடங்களில் 66 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் அதிபர் முகமது முய்சு.
பெரும்பான்மைக்குத் தேவையான 47 இடங்களை விட 19 இடங்கள் அதிகமாகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார் அதிபர் முகமது முய்சு.
மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 10 இடங்களில் சுயேட்சையாக நின்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டிலும் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்கும் அதிபர் முகமது முய்சு மாலத்தீவிலிருந்து இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியதிலிருந்தே புவிசார் அரசியலின் முக்கிய பகுதியாக மாலத்தீவு மாறி இருக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அவருக்கே பெரும்பான்மை ஆதரவு என்று காட்டி இருப்பது மேலும் புவி சார் அரசியலில் மாற்றங்களை உண்டாக்குமா? என்பதே அரசியல் நோக்கர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது .