செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி இன்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அவருக்கு வங்கி தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தன. தொடர்ந்து ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு வங்கி தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது.
பின்னர், விடுவிக்க கோரிய மனு மீது ஏப்ரல் 25ம் தேதி முதல் வாதங்களை தொடங்க செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
மேலும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.