முஸ்லிம்களுக்கு பாஜக பல்வேறு விஷயங்களை செய்துள்ளதாக பிரதமர் மோடி பட்டியலிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கு நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்றார்.
“காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகள் எப்பொழுதும் திருப்திப்படுத்தும் அரசியலையே செய்து வருகின்றன. முஸ்லிம்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக எதையும் அவர்கள் செய்ததில்லை.
முஸ்லிம்களின் அவலநிலையை நான் விவாதிக்கும் போது, அவர்களை அதே நிலையில் வாழ அவர்கள் வற்புறுத்தினார்கள். இந்த பகுதியில், முத்தலாக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பல மகள்களின் வாழ்க்கை சீரழிந்தது. முத்தலாக் காரணமாக, மகள், தந்தை, சகோதரர், குடும்பத்தினர் என அனைவரும் சிரமப்பட்டனர். தற்போது முத்தலாக் சட்டத்தை இயற்றி அவர்களின் உயிருக்கு மோடி பாதுகாப்பு அளித்துள்ளார்.” என்றார்.
மேலும், “கடந்த காலங்களில் ஹஜ் கோட்டா குறைவாக இருந்ததால் ஹஜ் செல்ல போட்டி நிலவியது. ஹஜ் செல்ல அனுமதி பெற லஞ்சம் கொடுக்க வேண்டும். செல்வாக்கு மிக்கவர்கள் மட்டுமே ஹஜ் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு சவுதி அரேபியா பட்டத்து இளவரசரை நான் கேட்டுக் கொண்டேன். இன்று, இந்தியாவின் ஹஜ் ஒதுக்கீடு அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், விசா விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் எமது முஸ்லிம் தாய்மார்களும் சகோதரிகளும் தனியாக ஹஜ்ஜுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இப்போது ஆண் துணையின்றி பெண்கள் ஹஜ் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆயிரக்கணக்கான சகோதரிகள் ஹஜ் செல்ல வேண்டும் என்ற தங்கள் கனவுகளை நிறைவேற்றியுள்ளனர். இதனை ஏற்படுத்தித் தந்த பாக்கியம் எனக்கு கிட்டியுள்ளது”என தெரிவித்தார்.