திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 107 டிகிரி வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவு வெயிலானது சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி மகன் விஷ்ணு (28) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் கோயில் எம்ஜிஆர் கல்லூரி பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாகனத்திலிருந்து ஏதோ புகைமூட்டம் வந்ததை அறிந்த விஷ்ணு பதறிப் போய் வாகனத்தை நிறுத்திவிட்டு பார்க்கையில் பெட்ரோல் டேங்க்கில் இருந்து கசிந்த பெட்ரோல் வாகனத்தின் மீது பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைகண்டு அதிர்ந்து போன விஷ்ணு உடனடியாக வாகனத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் நிறுத்திவிட்டார். மேலும் அருகாமையில் கேனில் இருந்த தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்த போது, தீ கட்டுக்கடங்காமல் இருசக்கர வாகனம் முழுவதும் மளமளவென தீப்பிடித்து பற்றி எரிந்தது.
வாகனம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு சிதறி ஓடி உள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனம் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.