பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை ஆதரித்து நேற்று பெங்களூருவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
கர்நாடகாவில் வரும் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அங்கு பாஜக, மஜதவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
தமிழர்கள் கணிசமாக வசிக்கும் ஜெயநகர், பிடிஎம் லே அவுட் ஆகிய பகுதிகளில் தமிழ் மற்றும் கன்னடத்தில் சரளமாக பேசி தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பின்னர் மாலையில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் பி.சி.மோகனை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தொகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் தமிழிலேயே பேசி வாக்குகளை சேகரித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை ,
‘‘10 ஆண்டு கால பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் மிகுந்த மரியாதை கிடைத்துள்ளது.
தமிழர்களின் அடையாளமான செங்கோலை நாடாளுமன்ற கட்டிடத்தில் வைத்துள்ளார்.
பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச அளவில் தமிழ் மொழிக்கு மேலும் சிறப்புகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.