நாகை மாவட்டம் இறையான்குடி கிராமத்தில் சாலையின் குறுக்கே மற்றும் விளைநிலங்களின் நடுவே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளைச் சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறையான்குடியில் இருந்து கிழக்கு காலனி தெருவிற்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாகவும், சாலையில் நடந்து செல்வோருக்கும், மின் கம்பிகளுக்கும் இடையே, ஒரு அடி உயரம் மட்டுமே இடைவெளி உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விளைநிலங்கள் வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பிகளும் மிகவும் தாழ்வாக செல்வதால், ட்ராக்டர் மின்கம்பியில் உரசி உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே உயிர்ச் சேதம் ஏற்படுவதற்குள் இதனை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.