நாட்டின் செல்வம் யாரிடம் உள்ளது என்பதைக் கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ராகுல் காந்தியின் வாக்குறுதி சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. அதற்குள் அடுத்த சர்ச்சை வந்து விட்டது. காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் ‘பரம்பரை வரி’ குறித்த கருத்து இந்திய தேர்தல் களத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. இது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா, அமெரிக்காவைப் போன்ற பரம்பரை வரியை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்ததோடு, இது போன்ற கொள்கைகள் ஒரு நாட்டுக்கு அவசியம் என்றும் கூறியிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் ஒரு அதிர்ச்சியையும் அச்சத்தையும் உண்டாக்கியது.
‘ஏற்கெனவே ‘மக்களின் தங்கத்தை கணக்கெடுத்து, அதிகம் உள்ளவர்களிடம் இருந்து பறித்து, அவற்றை அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கும், ஊடுருவல் காரர்களுக்கு , கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்று குற்றம் சாட்டியிருந்த பிரதமர் மோடி இப்போது பரம்பரை வரி குறித்தும் காங்கிரசை சாடி இருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் கட்சியின் ஆபத்தான கொள்கைகள் மற்றும் உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி இருக்கிறது என்றும், தங்களுடைய குடும்பத்தின் பூர்வீக சொத்துகளுக்கும் வேட்டு வைக்க காங்கிரஸ் தயாராகிவிட்டது என்றும் கூறினார்.
குடும்ப சொத்துக்களுக்கு அதிக அளவில் வரி விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர் என்றும், மேலும் அதில் ஒரு பகுதியை, அரசே எடுத்துக் கொண்டு, தங்களுடைய ஓட்டு வங்கிக்கு அளிக்க திட்டமிட்டுள்ளனர் என்றும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.
காங்கிரஸ் உங்களுடைய வாழ்க்கையின்போதும், உங்களுடைய வாழ்க்கைக்குப் பிறகும் உங்களுடைய சொத்துக்களை பறிக்க திட்டமிட்டுள்ளது என்றும், காங்கிரசின் வாரிசு தலைவருக்கு, இந்த நல்ல ஆலோசனையை ஒருவர் வழங்கியுள்ளார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அந்த வாரிசு தலைவரின் தந்தைக்கும் அவர் ஆலோசகராக இருந்தார் என்றும், உங்களுடைய சொத்துக்களை பிடுங்குவதுதான், அவர்களுடைய நோக்கம், எண்ணம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு பிரதமர் மோடி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ‘சாம் பிட்ரோடாவின் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்து என்றும், காங்கிரஸ் கட்சியின் கருத்துகளாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும்’ தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார் .
பரம்பரை வரி பற்றிய விவாதங்கள் எதிர்விவாதங்கள் எழுந்துள்ள சூழலில் பரம்பரை வரி என்றால் என்ன என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பரம்பரை வரி என்பதை அயல் நாடுகளில் inheritance tax அல்லது estate tax என்று குறிப்பிடுகிறார்கள்.
ஒருவர் இறந்துபின் அவரது சேமிப்புப் பணம் மற்றும் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரிதான் பரம்பரை வரி.
அரசுக்கு வருவாய் உருவாக்குவதே பரம்பரையின் வரியின் உள்நோக்கம் ஆகும். ஒருவரின் செல்வத்தை மறு பங்கீடு செய்வது என்பது இதுதான்.
உலகில் தென்கொரியா , ஜப்பான், பிரான்ஸ் , பின்லாந்து ,இங்கிலாந்து, வேல்ஸ் , ஸ்காட்லாந்து , பெல்ஜியம் மற்றும் அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில் இந்த பரம்பரை வரி விதிக்கும் நடைமுறையில் இருந்து வருகிறது. பரம்பரை வரி விகிதம் ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் அரசு கொள்கைக்கு ஏற்ப 7 சதவீதத்தில் இருந்து 55 சதவீதம் வரை மாறுபடுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை பரம்பரை வரி இப்போது கிடையாது. பரம்பரை வரி என்பதுக்கு பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும் என்று ஒரு சாரார் கூறினாலும் பொருளாதார நிபுணர்கள் கருத்து வேறுவிதமாக இருக்கிறது.
அதாவது, வளரும் நாடுகளுக்கு பரம்பரை வரி என்பது வளர்ச்சியை முற்றிலுமாக தடுத்து விடும். அமிர்த காலத்தில் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், பரம்பரை வரி நல்லதுக்கு அல்ல என்கிறார்கள் இந்த விவகாரத்தை நன்கு அறிந்தவர்கள்.