உணவு வகைகளில் புதுமையை தேடி உண்ணும் நாம் அவைகளால் ஏற்படும் பாதிப்புகளை உணராமல் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. அந்த வரிசையில் தற்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ள நைட்ரஜன் பிஸ்கட் மனித உடலுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
80 மற்றும் 90ம் ஆண்டுகளில் கடலை மிட்டாய் ,குச்சி மிட்டாய் ,பம்பர மிட்டாய் போன்ற திண்பண்டங்கள் பல தற்போதும் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றுக்கான வரவேற்பு என்னவோ மிகவும் குறைவு தான். இந்த தலைமுறையினரை கவர சந்தைகளில் நாள்தோறும் புதிய, புதிய திண்பண்டங்கள் அறிமுகமாகி வருகின்றன. அதில் ஒரு வகை உணவு தான் இந்த நைட்ரஜன் பிஸ்கட். இதனுடைய பாதிப்பு என்னவென்று தெரியாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர்.
உயிருக்கு உலை வைக்கும் திரவ நைட்ரஜனின் பயன்பாடு தான் என்ன ? அவை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம். நைட்ரஜன் காற்றை -196 டிகிரி செல்சியஸ்க்கு குளுமையாக்கும் போது திரவ நிலைக்கு வரும். இந்த திரவ நைட்ரஜன் பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட உணவு பொருட்களை பதப்படுத்தவும், சிறிய அளவிலான கடைகளில் குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை குளிரூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.
திரவ நைட்ரஜன் ஒரு நொடியில் எந்த ஒரு பொருளையும் உறைய வைக்கும் தன்மை கொண்டது. இந்த திரவ நைட்ரஜனின் நீராவி நம் தோல் திசுக்களை எளிதில் உறைய வைக்கும் இயல்பு கொண்டது என்று கூறும் மருத்துவர்கள். திரவ நைட்ரஜன் உணவு பொருட்களை உட்கொள்ளும் போது உயிரிழப்பிற்கே வழி வகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த திரவ நைட்ரஜன் பிஸ்கெட்களை சமூக வலைதளங்களில் பிரபலமாக்கும் நபர்களின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என்று எச்சரிக்கிறார் உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் சதிஷ்குமார்.
10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கூட புற்றுநோய், அல்சர் போன்ற பல உபாதைகள் வர முக்கிய காரணம் இது போன்ற உணவு பொருட்கள் தான் எனவும், குழந்தைகள் அடம் பிடிக்கின்றனர் என்பதற்காக அவர்களுக்கு அவற்றை வாங்கி கொடுக்க கூடாது என்கின்றனர் குழந்தைகள் நல சமூக ஆர்வலர்கள்.
ஆபத்தில்லா ஆனந்தமே அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் என்பதை மனதில் வைத்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதே மருத்துவர்களின் விருப்பமாக உள்ளது.