நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
கேரளாவில் 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் கண்ணுரில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்குப்பதிவு செய்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவின் பெங்களுருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் தனது தந்தையுடன் வந்து வாக்களித்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் மாற்றத்தையும், வளர்ச்சியையும், விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது எனக் கூறினார். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சரும் கேரளா மாநிலம் ஆற்றிங்கல் தொகுதியின் பாஜக வேட்பாளருமான வி.முரளீதரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மத்திய இணை அமைச்சரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளருமான கைலாஷ் சவுத்ரி அங்குள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.