கடுமையாக உழைத்தும் பணம் வரவில்லை. வந்தாலும் போதவில்லை. எப்போது தான் நல்ல காலம் வரும் என்று தெரியவில்லை என்று சொல்பவர்களுக்காக ஒரு திருக்கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலுக்கு ஒரு முறை சென்று வந்தாலே வீட்டில் செல்வம் நிறையும், மகிழ்ச்சி பொங்கும். செல்வம் வழங்கும் திருக்கோயிலைப் பற்றிய தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
திருக்கோயில்கள் அனைத்திலும் இருப்பது ‘பலிபீடம்’. பொதுவாக காவல் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் அமுதத்தை ‘ஸ்ரீபலி’ என்பார்கள்.
எல்லாக் கோயில்களிலும் பலிபீடத்தின் மீது அன்ன உருண்டை தான் நாளும் வைப்பது மரபு. ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் இந்த திருக்கோயிலில் பணம் கேட்டு வந்த ஒரு பக்தனுக்காக சிவபெருமான் பொற் காசுகளை பலிபீடத்தில் வைத்து அருள் செய்தார் என்பது வரலாறு.
1,200 ஆண்டுகளுக்கு முன் , சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரின் தந்தை இருதயருக்கு யாகம் நடத்த பணம் தேவைப்பட்டது. இது பற்றி மகனிடம் தெரிவித்தார். 3 வயதில் அம்மையின் ஞானப் பால் உண்ட பெருமை உடைய சம்பந்தரோ, சுவாமியிடம் வேண்ட, உடனே அள்ள அள்ள குறையாத 1000 பொற்காசுகள் உடைய உலவா கிழியை இந்தக் கோயிலின் பலிபீடத்தில் சிவபூத கணங்கள் வைத்து விட்டு சென்றதாக ஐதீகம். ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமிப் பெருவிழாவின்போது, ஐந்தாம் நாள் விழாவாக இன்றளவும் இந்த நிகழ்வு சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது.
கேட்டதும் பணம் கொடுத்த கோயில் என்பதால், நிறைந்த செல்வம் பெற ஒரு சிறந்த பரிகார கோயிலாகவே இந்த திருக் கோயில் திகழ்கிறது.
திருவாவடுதுறை ஆதீனக் கோயில்களில் முதன்மையானதும் மிக்க சிறப்புடையதாகவும் விளங்குகின்ற மாசிலாமணீஸ்வரர் கோயில், தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்கள் வரிசையில் 36வது ஆலயமாகும்.
இந்த கோயில் மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை – கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
பத்து ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இக்கோயில் ஐந்து நிலை ராஜ கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. இக்கோயிலில் வடக்குப்புற நுழைவாயிலில், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கிய கோயிலுக்கு,எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது. பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சந்நிதிகள். இரண்டாம் கோபுர வாயிலில் பெரிய நந்தியுள்ளது. பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்த இடமாகும்.
அருள்மிகு ஒப்பிலாமுலையம்மை உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலின் தீர்த்தமாக கோமுக்தி தீர்த்தம், பத்மதீர்த்தம், கைவல்ய தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்தக் கோயிலின் தலமரமாக படர் அரச மரம் அமைந்திருக்கிறது .
திருவாவடுதுறை தலத்தின் சிறப்புக்கள் சொல்லவேண்டுமென்றால் இப்படி வரிசை படுத்தலாம்.
இறைவி பசுவடிவில் வழிபட்ட பதியாகவும், திருஞானசம்பந்தர், இறைவனிடம் பொற்கிழி பெற்ற தலமாகவும் சுந்தர மூர்த்தி நாயனாரின் உடற்பிணிதீர்த்த தலமாகவும், திருவிடைமருதூரின் பரிவாரத் தலங்களுள் நந்தித் தலமாகவும், தேவர்கள் ‘படர் அரசு’ ஆக விளங்க அதன்கீழ் இறைவன் எழுந்தருளிய தலமாகவும், திருமூலர் தங்கியிருந்து தவம்செய்து திருமந்திரம் அருளிய தலமாகவும் விளங்குகிறது.
போக சித்தருடைய மாணவராகிய திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய தலமாகவும், சேரமான் பெருமான் நாயனார், விக்ரம பாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலமாகவும், முசுகுந்த சக்கரவர்த்திக்கு மகப்பேறு அருளிய தலமாகவும், தருமதேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்ற தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகிறது.
நவகோடி சித்தர்களுக்கு அட்டமா சித்திகளை அருளிய தலமாகவும் இருக்கின்ற இக்கோயிலில் புரட்டாசியில் பிரம்மோத்சவம் நடக்கிறது.
தை மாதம் ரத சப்தமி திருவிழா நடக்கும். மேலும் மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி, ஐப்பசி அன்னபிஷேகம், தீபாவளி, தைப் பொங்கல், சித்திரை ஆண்டு பிறப்பு , பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சுவாமிக்கும் , அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது. செல்வ வளம் வேண்டுவோர், சந்தான பாக்கியம் வேண்டுவோர், நவகிரக தோஷங்களில் என்ன தோஷமாக இருந்தாலும் அவை நீக்க வேண்டுவோர், இந்த திருவாவடு துறை மாசிலா மணீஸ்வரர் கோயிலுக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழி பட்டு சென்றால், நினைத்த காரியம் வைத்த வேண்டுதல், உடனே நிறைவேறும் என்பது பக்தர்கள் அனுபவம்.
நாமும் திருவாவடுதுறை ஈசனை வணங்கி வளம் பெறுவோம்!