“Fortune 500 நிறுவனங்களின் முதல் 10 CEO களில் பலர் அமெரிக்காவில் படித்த இந்தியர்கள் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கர்சிட்டி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது எப்படி சாத்தியமானது என்பது பற்றி பார்ப்போம்.
நீங்கள் இந்தியராக இருந்தால் அமெரிக்காவில் தலைமைச் செயல் அதிகாரி ஆக முடியாது என்பது ஒரு பழைய நகைச்சுவை. அனால் இன்றோ, இந்தியாவில் இருந்து வராவிட்டால், அமெரிக்காவில் தலைமைச் செயல் அதிகாரி ஆக முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
21 ஆம் நூற்றாண்டின் கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் இந்தியர்கள் உலகை வழிநடத்துவதை நம்மால் காண முடிகிறது. உலகின் சிறந்த நிறுவனங்களை ஆளும் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர்களே கோலோச்சுகிறார்கள்.
இந்தியா போன்ற வளரும் நாட்டில், பிறந்து , சிறந்த திறமைகளைத் தக்கவைத்துக் கொண்டு , கடுமையாகப் உழைத்து,அறிவில் சிறந்து , தாய்நாட்டிற்கு வெளியே தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டு , உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பது பெருமை.
அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களைப் பாராட்டி ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த , இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதுவரான எரிக் கர்சிட்டி, “கூகுள், மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ் என எதுவாக இருந்தாலும், நீங்கள் இந்தியராக இல்லாவிட்டால், அமெரிக்காவில் சிஇஓ ஆக முடியாது. இந்தியர்கள் இங்கே வந்து ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர், ”என்று தெரிவித்தார்.
சென்னையில் இருந்து கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை, ஹைதராபாத்தில் இருந்து மைக்ரோசாப்ட்டின் சிஇஓ சத்யா நாதெள்ளா, புனேவில் இருந்து ஸ்டார்பக்ஸ்ஸின் சிஇஓ லக்ஷ்மன் நரசிம்மன் என இந்த பட்டியல் நீளுகிறது.
மேலும் Fortune 500 நிறுவனங்களுக்கு தலைமை தாங்குபவர்களில் பத்தில் ஒருவர் அமெரிக்காவில் படித்த இந்தியர் என்று குறிப்பிட்ட எரிக் கர்சிட்டி, எப்படி அவர்கள் இந்த உயரத்தை அடைந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 44 லட்சம் பேர் இந்தியாவில் பிறந்து, அமெரிக்க குடியுரிமை பெற்ற அமெரிக்க இந்தியர்கள். இது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 50 சதவீதம் கூடி உள்ளது என்றும் தெரிவித்தார்.
கூகுள் மற்றும் ALBHAPET CEO-சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் CEO-சத்யா நாதெல்லா,
CHANEL CEO – லீனா நாயர், IBM CEO- அரவிந்த் கிருஷ்ணா, அடோப் சிஸ்டம்ஸ் CEO- சாந்தனு நாராயண், ஆல்டோ நெட்வொர்க் CEO- நிகேஷ் அரோரா, அரிஸ்டா நெட்வொர்க் CEO- ஜெயஸ்ரீ உல்லால், NetApp CEO-ஜார்ஜ் குரியன், ஸ்டார்பக்ஸ் CEO- லக்ஷ்மன் நரசிம்மன் என்ற வரிசையில் இன்னும் நிறைய சிஇஓ-க்கள் இருக்கின்றனர்.
இந்தியர்களிடம் நேர்மையும் தர்மமும் இருக்கிறது. மேலும் இந்தியர்கள் கையில் கொடுக்கப் பட்ட நிறுவனங்கள் அனைத்தும் மிகப் பெரிய வர்த்தக மற்றும் நிறுவன மதிப்பில் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால் தான் Fortune 500 நிறுவனங்களுக்குத் தலைமை தாங்க இந்தியர்களைத் தேடி பிடிக்கிறார்கள் என்பதே தொழில்துறையினரின் கருத்தாக உள்ளது.