முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வீடியோ விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணைக்கு பயந்து பிரஜ்வல் ரேவண்ணா, ஜெர்மனிக்கு தப்பித்து சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
முன்னாள் பிரதமர் தேவ கவுடா கர்நாடகாவில் உள்ள கவுடா சமூக மக்களின் வாக்குகளை நம்பியே அரசியல் களத்தில் இருக்கிறார். அவரது மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில், அவரது குடும்ப உறுப்பினர்களே தேர்தலில் போட்டியிடுவது வழக்கம்.
தேவகவுடா மகன்களான ரேவண்ணா, குமாரசாமியைத் தொடர்ந்து அவரது பேரன்களும் அரசியலில் இருக்கின்றனர்.
மண்டியா தொகுதியில் தேவகவுடாவின் மகன் குமாரசாமியும் , ஹசன் தொகுதியில் தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவும் போட்டியிடுகின்றனர்.
தொடர்ந்து மக்கள் செல்வாக்கை இழந்து வருவதற்கு காரணம் காங்கிரசுடன் கூட்டணி வைத்தது எனக் கணக்கு போட்ட, மத சார்பற்ற ஜனதா தளம், இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது.
இந்நிலையில் தான் ஹசன் தொகுதியின் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹசன் தொகுதியில் கடந்த 26ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நாளில் இருந்தே இந்த சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
பரவும் பாலியல் வீடியோக்களில் பிரஜ்வல் ரேவண்ணாவின் முகம் தெளிவாக தெரியவில்லை என்றாலும் உதவி கேட்டு சென்ற தங்களை பிரஜ்வல் தவறாக பயன்படுத்தி கொண்டதாகவும், நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து வைத்து, தங்களை மிரட்டுவதாகவும், சில பெண்கள் கன்னட தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தனர்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் பெயரைக் கெடுக்கவேண்டும் என்று ஒரே நோக்கத்தில், உண்மை இல்லாத இத்தகைய பாலியல் வீடியோக்களை மார்ப்பிங் செய்து பரப்புகின்றனர் என்று கூறிய அக்கட்சியின் ஹசன் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் புகார் ஒன்றும் அளித்தார்.
பிரஜ்வல் ரேவண்ணா மீது தகுந்த நடவடிக்கை வலியுறுத்தி , கர்நாடக மாநில மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் தான், ‘இது குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும்’ என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 ஏ, 354 டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிஜேஷ்குமார் சிங், மற்றும் ஐ.பி.எஸ்., பெண் அதிகாரிகள் சுமன் பன்னேகர், சீமா லட்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழு விசாரணையைத் தொடங்கி உள்ளது .
தனது புகழைக் கெடுக்கவும், வாக்காளர்கள் மனத்தில் விஷத்தை பரப்பவும் இந்த வீடியோக்கள் தனக்கு எதிராக பரபரப்படுவதாக பிரஜ்வல் ரேவண்ணாவும் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
பிரஜ்வல் ரேவண்ணாவைக் கண்டித்து, பெங்களூரூவில் உள்ள மாநில டி.ஜி.பி., அலுவலக வளாகத்தில், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்பா அமர்நாத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
மேலும் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் பவன் வளாகத்தில், பிரஜ்வல் ரேவண்ணாபடத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், அவரது உருவ பொம்மையை எரித்தும் காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டமும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ,தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவும், பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவும், தனக்கும் தனது மகளுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக, ரேவண்ணா வீட்டுப் பணிப்பெண் ஒருவர், ஹொளேநரசிபுரா காவல்நிலையத்தில் புகார் அளித்துளளார்.
இந்தப் புகாரின் பேரில் ரேவண்ணா, மற்றும் அவரது மகன் பிரஜ்வல் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த பாலியல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கர்நாடக முதல்வரும், பிரஜ்வல் ரேவண்ணாவின் சித்தப்பாவுமான குமாரசாமி, சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தட்டும் என்றும், உண்மை வெளி வரட்டும். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துபவர்கள் என்றும், பெண்களுக்கு எப்போதும் மதிப்பு அளிப்பதாகவும் கூறியுள்ள குமாரசாமி, பிரஜ்வல் வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருந்தால், சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் கன்டுபிடிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் இருந்து சற்றே விலகியே உள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் “பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வழக்கில் மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து தாங்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த பாலியல் விவகாரம் கர்நாடக அரசியலில் மிக பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வட கர்நாடகா மக்களவை தேர்தலில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.