ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரஜ்வால் ரேவண்ணா மீது கர்நாடக காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
பாஜக இடஒதுக்கீடு முறையை அகற்றி நினைப்பதாக காங்கிரஸ் கட்சி பொய்யான தகவலைப் பரப்பி வருவதாகவும், பாஜக எப்போதுமே இடஒதுக்கீட்டு ஆதரவாக இருக்குமெனவும் தெரிவித்தார்.
மதசார்பற்ற ஜனதா தளம் எம்பி பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மகளிருக்குத் துணை நிற்பதே பாஜகவின் நிலைப்பாடு எனவும், கர்நாடக காங்கிரஸ் அரசு பிரஜ்வால் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
பிரஜ்வால் விவகாரத்தில், பிரதமர் மோடியைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, பிரியங்கா காந்தி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேள்வி கேட்க வேண்டும் எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.