முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கடைசி தேதி 30.04.2024 என்ற செய்தி தவறானது எனப் புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கடைசி தேதி 30.04.2024 என்ற தவறான செய்தி பல்வேறு வகைகளிலும், சமூக ஊடகங்களிலும் பரவி வருவது தங்கள் கவனத்திற்கு வந்திருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (முதுநிலைப் படிப்பு) மதிப்பெண் அடிப்படையில், முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புக்கான சேர்க்கை விரைவில் தொடங்கும் என்பதை 2024-25-ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக இணைய தளத்தின் பக்கம் தெளிவாகக் காட்டுகிறது.
மேலும் பல்கலைக்கழகத்தின் பிரதான இணையப் பக்கத்திலும் 2024-ம் ஆண்டுக்கு மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (முதுநிலைப் படிப்பு) மதிப்பெண் அடிப்படையில், முதுநிலைப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் போர்ட்டல் விரைவில் செயல்படும் என்ற செய்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு 30.04.2024 கடைசி தேதி என இதுவரை பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்படவில்லை என்பது இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.pondiuni.edu.in என்பதில் வெளியிடப்படும் தகவலை மட்டுமே நம்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.