சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் படுகொலை சதியில் இந்திய ரா அமைப்பின் தொடர்பு இருப்பதாக தி வாஷிங்டன் போஸ்ட் இதழ் வெளியிட்டுள்ள செய்திக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புப் போராடி வருகிறது. கனடாவில் இருந்துகொண்டு, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உண்டு என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குற்றம் சாட்டிய விவகாரத்தில் இருநாடுகளுக்குள் விரிசல் ஏற்பட்டு அந்த மோதல் இன்று வரை நீடிக்கிறது.
இந்திய அரசால் தடை செய்யப்ட்ட அமைப்பான sikh for justise, அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நோக்கம் சீக்கியர்களுக்கு தனிநாடு காலிஸ்தான் வேண்டும் என்பது தான்.
இந்த அமைப்பின் சட்ட ஆலோசகராகவும்,செய்தி தொடர்பாளராகவும் இருப்பவர்தான் அமெரிக்காவில் வசிக்கும் குர்பத்வந்த் சிங் பன்னுன். காலிஸ்தான் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், இந்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப் பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது படுகொலை முயற்சி நடந்தது.
அவரை படுகொலை செய்ய முயன்றதாக இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா என்பவர் செக் குடியரசால் கைது செய்யப் பட்டார். பிறகு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்ல சதி செய்ததாக குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, நிகில் குப்தா மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. அதில் நிகில் குப்தா இந்திய அரசின் ஊழியர் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது .
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‛‛தி வாஷிங்டன் போஸ்ட்” என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்யும் முயற்சியில் சிசி-1 என்ற ரகசிய நபர் இந்தியா உளவு அமைப்பின் ‛ரா’ அதிகாரி விக்ரம் யாதவின் தலைமையிலான குழுவின் ஆலோசனை படி நியூயார்க் நகரில் இருந்து திட்டம் உருவானது என்றும், அப்போதைய இந்திய உளவு அமைப்பின் தலைவர் சமந்த் கோயலின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு “தி வாஷிங்டன் போஸ்ட்” செய்தி அறிக்கை தெரிவித்த நிலையில், இந்திய வெளியுறவு துறை உடனே, இது ஆதாரமற்ற செய்தி மட்டுமல்ல உண்மையற்ற செய்தி என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் ,”தி வாஷிங்டன் போஸ்ட்” செய்தி அறிக்கையினால் எந்த பயனும் இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.