பாய்மர படகு விளையாட்டில் பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள சென்னை வீராங்கனை நேத்ரா குமணன் குறித்த செய்தித் தொகுப்பு ஒன்றை தற்போது பார்க்கலாம்…
சர்வதேச அரங்கில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது, ஒட்டுமொத்த உழைப்பின் ஒவ்வொரு சொட்டு வியர்வை துளிகளுக்குமான வெற்றியை பெருமைப் படுத்துவதற்கு சமமானது…
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருக்கும் பெருமையை விட, வேறு என்ன இருந்துவிட முடியும்? அந்த பெருமையை, தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுக்கொடுத்து, அடுத்தடுத்து தன்னை அடையாளப் படுத்தி இருக்கிறார் நேத்ரா குமணன்…
சென்னையில் பிறந்த நேத்ரா குமணன் பாய்மர படகு விளையாட்டில் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற முதல் பெண் வீராங்கனை ஆவார். கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று நாட்டிற்கு பெருமையை தேடி தந்த நேத்ரா குமணன், இந்த ஆண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
தனது கடின உழைப்பின் மூலம் எப்படியாவது ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெற்று விளையாடி, பதக்கம் வென்று கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஊக்கத்துடன் பல்வேறு தொடர்களை எதிர்கொண்ட நேத்ரா, பிரான்சின் ஹையரெஸ் நகரில் நடந்த லாஸ்ட் சான்ஸ் ரெகாட்டாவில், பெண்களுக்கான டிங்கியில் ILCA 6 பிரிவில் போட்டியிட்டார்.
அதில் 67 நிகர புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த லீடர்போர்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் ஒலிம்பிக் தொடருக்கான வாய்ப்பை பெற்றார் நேத்ரா. கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண்ணான நேத்ரா, 2013 இல் 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் சிறுமியாக தனது பெரிய பயணத்தை தொடங்கியவர்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அவர் இடம்பெற காரணமான நேத்ராவின் தாய், தனது மகளை நினைத்து வருத்தப்பட்ட தருணம் உண்டாம்.
பெண் குழந்தையாக இருக்கும் போது, கூடுதல் தைரியத்தை கொடுத்து வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், திறமையான குழந்தையாக வளர்த்து, அவர் மீதான நம்பிக்கையை அளவுக்கு அதிகமாக கொண்டிருக்கிறார் நேத்ராவின் தந்தை.
ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக பங்கேற்று விளையாடும் ஒவ்வொருவரும் வெற்றியாளர்தான். அந்த வகையில் பாய்மர படகு விளையாட்டில் இரண்டாவது முறையாக தகுதி பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெருமை சேர்த்துள்ளார் நேத்ரா… அதுமட்டும் இன்றி இந்தியாவை உலக அரங்கில் பாய்மர படகு விளையாட்டுக்கான வரைபடத்தில் கம்பீரமாக இடம் பெறச் செய்திருக்கிறார்… இனி கனவு காண்பது நம் வேலையாக இருந்தாலும், கனவை நிறைவேற்றும் பணி நேத்ராவுடையதாக இருக்கட்டும்.