காலத்தால் அழியாத பல பாடல்களை பாடிய உமா ரமணன் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருந்த இளையராஜவின் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து அசத்திய உமா ரமணன் பற்றிய நினைவலைகளை பார்க்கலாம்…
தேனினும் இனிய குரலால் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த பின்னணிப் பாடகி உமா, படித்துக் கொண்டிருந்தபோதே, பழனி விஜயலட்சுமியிடம் பாரம்பரிய இசையைக் கற்றார்.
பின்னர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும், மேடைப் பாடகருமான ஏ.வி.ரமணனுடன் இணைந்து மேடைக் கச்சேரிகளில் பாடியதுடன், அவரையே திருமணம் செய்து கொண்டார்.
மேடை கச்சேரியில் பாடி கொண்டிருந்த உமா ரமணனுக்கு, 1980ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார். தொடர்ந்து இளையராஜா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன், ஷங்கர் கணேஷ், எஸ்.ஏ ராஜ்குமார், தேவா, வித்யாசாகர் உள்ளிட்ட வெகு சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினாலும் பெரும்பாலும் இளையராஜா இசையில் தான் அதிக பாடல்கள் பாடி உள்ளார் உமா ராமணன். அவரது இசையில் மட்டும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
குறிப்பாக, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 1981 ஆண்டு வெளியான குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் கல்வியில் சரஸ்வதி என்ற பாடலும், விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில், “கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு போன்ற பாடலையும் பாடியிருந்தார் உமா ரமணன்.
ஒவ்வொரு காலக் காட்டத்திலும் ஒவ்வொரு பாடகர்களின் குரலுக்கும் ஒரு தனித்துவம் பெற்றுவந்த நிலையில், 90-களில் வலந்த உமா ரமாணனின் குரல் காற்றினில் கேட்கும் காவிய ராகமாய் ஒலித்தன.
திரைப்படத்தில் மட்டுமின்றி, கடந்த 35 ஆண்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும் கணவர் ரமணுடன் இணைந்து பாடியுள்ளார்.
1980ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரது இசைப்பயணம், இளையராஜாவில் தொடங்கி இளையராஜாவுடனே முடிந்திருக்கிறது.
மீண்டும், மீண்டும் கேட்க துாண்டும் பல பாடல்களை அளித்த காவியக்குரல் காற்றில் கலந்தாலும் காலம் தாண்டியும் நம் காதுகளில் இன்னும் பல ஆண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.