மருத்துவ குணம் கொண்ட தேன், உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு, இதயம் சீராக இயங்கவும், உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும், இதயத்தின் தசைநார்களை வலிமை படுத்தவும் பேருதவி செய்கிறது. குறிப்பாக, இனிக்கும் மருத்துவ தன்மை கொண்ட கன்னியாகுமரி தேன் விவசாயிகளின் கசக்கும் வாழ்வாதாரமாக மாறியது எப்படி என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேன், மருத்துவ தன்மை சுவை அதிகம் கொண்டதால், உலக தரத்தில் முதல் இடம் பிடித்துள்ளது.
இந்த தேனுக்கு மோடி அரசு புவிசார் குறியீடு கொடுத்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாள்தோறும் பத்து லட்சம் கிலோ தேன் விவசாயம் நடைபெற்று வருகின்றது.
இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் விவசாயிகள் முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தேனை, கேரளாவில் உள்ள கூட்டுறவுத் துறை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது. மேலும், தமிழக அரசும், ஒரு கிலோ தேன் 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்தாலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து தேனையும் கொள்முதல் செய்யாததால், தனியாருக்கு குறைந்த விலைக்கு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய அவலநிலை தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக தேன் ஆராய்ச்சி மையம் அமைக்காத காரணத்தால் தேனிக்கள் நோய் தாக்குதல் கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கார்பரேட் தேன்கள் இறக்குமதியால், தேன் விவசாயம் அழியும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், குமரி தேன் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி, மாற்று தொழிலை தேடும் கசப்பான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அழியும் விழிம்பில் உள்ள அதிக மருத்துவ குணம் கொண்ட குமரி தேன் விவசாயத்தை காப்பற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.